கோவில்பட்டியில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


கோவில்பட்டியில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2018 3:00 AM IST (Updated: 13 Jan 2018 7:11 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தொடங்கி வைத்தார்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக, கோவில்பட்டியில் 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை, கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, அரசு ஆஸ்பத்திரி முன்பு, அம்பேத்கர் சிலை சந்திப்பு, பசுவந்தனை ரோடு சந்திப்பு, மந்திதோப்பு ரோடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் முன்பு, தெற்கு பஜார் உள்ளிட்ட 37 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் ஒரு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில், 2 போலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டுபவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வாகன எண்களை குறித்து வைத்து, அவர்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும். பிக் பாக்கெட், வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கடும் நடவடிக்கை

சிறுவர்களிடம் வாகனங்களை இயக்க வழங்கினால், அவர்களுடைய பெற்றோர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டோக்கள், மினி பஸ்களை போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அவற்றை நிறுத்த வேண்டும்.

குற்றச்செயல்கள், அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கோவில்பட்டியை விபத்தில்லாத நகரமாக்கவும், சட்டம்– ஒழுங்கில் முதன்மை நகரமாக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு), போக்குவரத்து போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story