கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகார்; சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு


கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகார்; சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
x
தினத்தந்தி 14 Jan 2018 5:00 AM IST (Updated: 14 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகார் தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு கொடுத்தனர்.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான பாஸ்கர் தனது காரின் நம்பர் பிளேட்டை மாற்றுவது தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை மிரட்டியதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். கவர்னரின் இந்த செயலை கண்டித்து பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் சகோதரரான அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் மாளிகைக்கு விளக்கம் கேட்க சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது பாஸ்கர் எம்.எல்.ஏ. ஒரு உரிமை மீறல் புகார் ஒன்றை வழங்கினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 10-1-2018 அன்று இரவு வாட்ஸ் அப் சமூக வலைதளம் மூலம் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான செல்போன் எண் புதுவை கவர்னருக்கு உரியதாக தெரிகிறது. அந்த செய்தி என்னவென்றால், நான் கடந்த 10-ந்தேதி காலை 10 மணி அளிவல் போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு சொகுசு கார் ஒன்றை கொண்டுவந்து அதற்கு நம்பர் பிளேட் போட சொன்னேன் என்றும், அதற்கு துறை அதிகாரிகள் காரில் கூலிங் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதால் நம்பர் பிளேட் போட மறுத்ததாகவும், அதனால் நான் 10 ரவுடிகளை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதிகாரிகளை மிரட்டி நம்பர் பிளேட் பொருத்தி சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதை அறிந்த கவர்னர் இதுசம்பந்தமாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும், அவரது பெயரில் செய்திகள் சமூக வலைதளம் மூலம் வெளிவந்துள்ளது. ஆனால் நான் புதிய கார் வாங்கவும் இல்லை. எந்த விதமான நிகழ்வுகளும் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நடைபெறவில்லை. மாறாக எனக்கு பொதுமக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்கவும், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் வேண்டுமென்றே அன்றைய தினம் நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாக சித்தரித்து பொய்யான செய்தியை என் மீது வேண்டும் என்றே சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இது எனது நற்பெயருக்கு மிகுந்த களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நானும் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். எனவே இதனை நான் உரிமை மீறல் புகாராக தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதில் தாங்கள் தலையிட்டு தவறு யார் செய்து இருந்தாலும் சபாநாயகர் என்ற முறையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரினை பெற்றுக்கொண்ட சபாநாயகர் வைத்திலிங்கம், சம்பந்தப்பட்ட துறையிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Next Story