அரசு சொகுசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்தது பெண்கள் உள்பட 8 பேர் பலி


அரசு சொகுசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்தது பெண்கள் உள்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2018 4:45 AM IST (Updated: 14 Jan 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் அருகே, அரசு சொகுசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹாசன்,

இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மசாலாவுக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அரசு சொகுசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 44 பேர் பயணம் செய்தனர்.

அந்த பஸ் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் ஹாசன் தாலுகா சாந்தி கிராமம் அருகே கரேகெரே பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், சாலையோரத்தில் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து பல்டி அடித்து கவிழ்ந்தது. அந்த சமயத்தில் பஸ்சுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள், அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள்.... என்று அபயகுரல் எழுப்பினார்கள்.

இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பஸ் கால்வாயில் கவிழ்ந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சாந்தி கிராம போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர், கண்டக்டர், 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் 10 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பகுதி பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து பாதிப்பை சீர்செய்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பஸ் டிரைவர் சிவப்பா சலவதி(வயது 40), கண்டக்டர் லட்சுமண்(45), பெங்களூருவை சேர்ந்த கங்காதர்(55), பெல்தங்கடியை சேர்ந்த பிஜோ(25), மங்களூருவை சேர்ந்த டயானா(22), சோனியா(28), என்பது தெரிந்தது. மேலும் 2 பெண்களின் பெயர், விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை.

அதேப்போல் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. டிரைவர் பஸ்சை தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் தான் விபத்து நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக சாந்தி கிராம போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த 26 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரையும் ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி ஏ.மஞ்சு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 8 பேர் இறந்த சம்பவம் சாந்தி கிராமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story