ஓசூரில் பிரபல ரவுடி கடத்தல் ரத்த கறையுடன் சொகுசு கார் பறிமுதல்


ஓசூரில் பிரபல ரவுடி கடத்தல் ரத்த கறையுடன் சொகுசு கார் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:30 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் கத்தியால் குத்தி காரில் கடத்தி சென்றனர். மர்ம கும்பல் விட்டு சென்ற கார் ரத்த கறையுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு என்கிற பிரேம் நவாஸ் (வயது 36). பிரபல ரவுடி. இவர் ஓசூர் ராம்நகரில் தாஜ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், கடந்த 2012-ம் ஆண்டு ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் இரும்பு வியாபாரி முஸ்தாக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சேட்டு முக்கிய குற்றவாளி ஆவார்.

இதைத் தவிர ஓசூரில் டவுன், அட்கோ போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிரபல ரவுடியான இவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சேட்டு, வீட்டில் இருந்தார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சேட்டுவை கத்தியால் சரமாரியாக குத்தி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

முன்னதாக சேட்டுவை கடத்துவதற்காக வந்த கும்பல் 2 சொகுசு கார்களில் வந்துள்ளனர். அதில் ஒரு கார் பழுதாகவே அதை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு மற்றொரு சொகுசு காரில் சேட்டுவை தூக்கி போட்டு அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர், அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ரத்த கறை படிந்திருந்த நிலையில் ஒரு சொகுசு கார் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேட்டு தங்கி இருந்த வீட்டிலும் ரத்த கறை காணப்பட்டது. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சேட்டுவை கடத்திய கும்பல் சென்ற கார் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேட்டுவுடன் இருந்த ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

ஓசூரில் கடந்த 15 ஆண்டுகளில் பல கொடூர கொலைகள் நடந்துள்ளன. ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன், ராம் நகர் நூருல்லா, இரும்பு வியாபாரி முஸ்தாக், ஜான் பாஷா, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் அம்மன் பாலாஜி, கேபிள் டி.வி. அதிபர்கள் தென்னரசு, மணி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி, விசுவ இந்து பரிஷத் மகேஷ், பெங்களூரு மடிவாளா பிரபல ரவுடி கவாலா என்கிற விஜயகுமார் உள்பட பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.

இந்த நிலையில் ஓசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும், சேட்டுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த ரவுடி கோஷ்டி, சேட்டுவை கடத்தி சென்றிருக்கலாம் எனவும், காரில் ரத்த கறை உள்ளதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story