முதியவர் அடித்துக்கொலை சொத்து தகராறு காரணமா? போலீசார் விசாரணை


முதியவர் அடித்துக்கொலை சொத்து தகராறு காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:30 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மூக்கன்(வயது 84). இவரது மனைவி தர்மாம்பாள். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. தர்மாம்பாள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மூக்கன் அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

மூக்கனுக்கு 45 சென்ட் நிலமும், 10 சென்ட் தோட்டமும், ஒரு ஓட்டு வீடும் உள்ளது. இவருக்கு வாரிசுகள் இல்லாததால் மேற்கண்ட சொத்துக்களை அவரது உறவினர்கள் தங்களுக்கு தருமாறு மூக்கனிடம் கேட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக உறவினர்களுடன் சில நேரங்களில் தகராறும் ஏற்பட்டுள்ளது.


நேற்று போகி பண்டிகை என்பதால் அருகில் உள்ளவர்கள் அதிகாலை எழுந்து வீட்டு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

அப்போது, மூக்கன் தனது வீட்டின் முன்பு தலையில் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூக்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் டிப்சி வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் கண்டராதித்தம் பஸ் நிறுத்தம் வரை சென்று நின்று விட்டது.

சொத்தை பிரித்து தராததால் உறவினர்கள் அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திருமானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story