ஜல்லிக்கட்டில் பதிவு செய்த வீரர்களையே காளைகளை அடக்க அனுமதிக்க வேண்டும், சப்-கலெக்டர் உத்தரவு


ஜல்லிக்கட்டில் பதிவு செய்த வீரர்களையே காளைகளை அடக்க அனுமதிக்க வேண்டும், சப்-கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2018 4:05 AM IST (Updated: 14 Jan 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவதற்காக பதிவு செய்த மாடுபிடி வீரர்களையே களத்தில் காளைகளை அடக்க அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பழனி,

பழனி அருகே பெருமாள்புதூரில் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த கோவிலில் திருவிழா நடைபெறும். அப்போது விழா கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி சப்- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதற்கு சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் விழா கமிட்டியினர் மற்றும் நடுத்தெரு, கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் 2 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். 4 டாக்டர்கள் மற்றும் குழுவினர் தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வாடிவாசல், பார்வையாளர்கள் பகுதி, பெருமாள்புதூர் பஸ்நிலையம் உள்பட 12 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

வாடிவாசலுக்குள் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு 100 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையாக டோக்கன், சீருடை வழங்கப்பட்டிருக்க வேண்டும். டோக்கன் பெற்று முறையான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே களத்தில் காளைகளை அடக்க வேண்டும்.
 
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உரிய அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். விழாவில் கலந்துகொள்பவர்கள் மது உள்ளிட்ட போதை பொருட்களை அருந்த கூடாது. அதனையும் மீறி மது அருந்தியவர்கள் யாரேனும் விழாவில் கலந்துகொண்டு தகராறில் ஈடுபட்டால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தில் மாடுபிடி வீரர்கள் ஒரு காளையை பிடிக்கும் நேரத்தில் அதன் உரிமையாளரோ அல்லது மற்ற வீரர்களோ அந்த மாட்டை அடைய முயற்சிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Next Story