ஒகி புயல் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் கன்னியாகுமரியில் சீசன் களையிழந்தது


ஒகி புயல் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் கன்னியாகுமரியில் சீசன் களையிழந்தது
x
தினத்தந்தி 14 Jan 2018 4:47 AM IST (Updated: 14 Jan 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயல், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆகியவற்றால் கன்னியாகுமரியில் இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்கள் சீசன் களையிழந்தது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் கன்னியாகுமரி மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இது உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

 அதுமட்டுமின்றி அதிகாலையில் சூரியன் உதயமாகும் அற்புத காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் ரம்மியமான காட்சியையும் இங்கு மட்டுமே ஒரே இடத்தில் காண முடியும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி  பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். மேலும் இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் இங்கு முத்தமிடுவதால், இந்த முக்கடல் சங்கமத்தை கண்டுகளிக்கவும் இதில் புனித நீராடவும் சுற்றுலாபயணிகள் மட்டு மின்றி பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சீசன் காலம்

கன்னியாகுமரியில் ஆண்டு முழுவதும் சுற்றுலாபயணிகள் வந்து சென்றாலும்,  நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு முக்கிய சீசன் காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

மேலும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை வருவதால் வழக்கத்தை சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுக்கடங்காத அளவுக்கு இருக்கும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாத காலம் லட்சக்கணக்கான சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

களையிழந்தது

கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் எதிர்பார்த்த சீசன் இல்லை. அதே போல இந்த ஆண்டும் சீசன் களையிழந்து காணப்படுகிறது. ஒகி புயல் தாக்குதல், பஸ் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் போன்ற பிரச்சனைகளினால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாபயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்த சீசன் காலகட்டத்தில் கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600–க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் முளைக்கும். இந்த ஆண்டும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை நம்பி கன்னியாகுமரியில் வழக்கம்போல் நூற்றுக்கணக்கானோர் தற்காலிக கடைகளை ஏலம் எடுத்து இருந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால், வியாபாரம் குறைந்து வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.


Next Story