திருப்புல்லாணி, நயினார்கோவில் பகுதிகளில் விலைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிரை காப்பாற்றும் விவசாயிகள்


திருப்புல்லாணி, நயினார்கோவில் பகுதிகளில் விலைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிரை காப்பாற்றும் விவசாயிகள்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:12 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி வாடும் பயிரை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதாலும், விவசாயத்திற்காக வைகை தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழையை நம்பி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தங்களின் நிலங்களில் வளர்ந்தும், வளராமலும் உள்ள நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக மிகவும் போராடி வருகின்றனர். ஒருசில இடங்களில் சிறிதளவு மழை பெய்தால் போதும் நெற்பயிர்கள் பிழைத்துவிடும் என்ற நிலை உள்ளது. பல இடங்களில் நெற்பயிர் முளைக்க தொடங்கிய உடனே தண்ணீரின்றி கருகி போய்விட்டன. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தங்களின் நிலங்களில் இனியும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் முடிந்தவரை நெற்பயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்று நீராதாரங்களுக்காக பல ஆயிரம் செலவு செய்து வருகின்றனர். மழையை நம்பி பயனில்லை, நீராதாரங்களை புதிதாக உருவாக்கியாவது தண்ணீரை பாய்ச்சி நெற்பயிரை காப்பாற்ற முயன்று வருகின்றனர். தங்களின் நெற்பயிர்களுக்காக புதிதாக கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து வருகின்றனர். இந்த நீராதாரங்களும் உப்பு தண்ணீராக விவசாயத்திற்கு பயனில்லாத வகையில் இருப்பதால் விவசாயிகள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்புல்லாணி அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் நெற்பயிர்களை காப்பாற்ற விலைக்கு தண்ணீர் வாங்கி பாய்ச்சி வருகின்றனர். குறிப்பாக பொக்காரனேந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு விலை கொடுத்து தனியார் தண்ணீர் லாரிகளில் நீர் கொண்டு வந்து பாய்ச்சி வருகின்றனர். இதற்காக ஒரு லாரி தண்ணீர் ரூ.700 முதல் 800 வரை செலவு செய்து வாங்கி வயலுக்கு பாய்ச்சுவதாகவும், இதன் மூலம் ஓரளவு தண்ணீர் கிடைத்து நெற்பயிர்கள் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story