ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு, 20 பயணிகளை காப்பாற்றிய நிலையில் உயிர் பிரிந்தது


ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு, 20 பயணிகளை காப்பாற்றிய நிலையில் உயிர் பிரிந்தது
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 8:22 PM GMT)

அவினாசியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பரிதாபமாக இறந்தார். பஸ்சை சாலையோரம் நிறுத்தி 20 பயணிகளையும் காப்பாற்றிய நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

அவினாசி,

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மூலவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சின்னப்பனின் மகன் பெருமாள்(வயது 32). இவர் திருப்பூர்-கருவலூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் திருப்பூரில் இருந்து தனியார் பஸ்சை ஓட்டிக்கொண்டு பெருமாள் கருவலூர் நோக்கி புறப்பட்டார். பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர்.

அவினாசி பழைய பஸ்நிலையம் அருகே சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஸ்டியரிங்கில் அப்படியே சாய்ந்தார்.

உடனே கண்டக்டர் ஓடிச்சென்று பார்த்த போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது. தான் இறக்கும் தருவாயிலும் பஸ்சை ஓரமாக நிறுத்தி 20 பயணிகளை காப்பாற்றிய டிரைவரின் செயலை பயணிகள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story