விவசாயியை கொன்று ஏரியில் பிணம் வீச்சு, மனைவி-கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது


விவசாயியை கொன்று ஏரியில் பிணம் வீச்சு, மனைவி-கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2018 4:45 AM IST (Updated: 16 Jan 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை கொன்று ஏரியில் பிணத்தை வீசிய அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் எடக்கிலிங்கம் மகன் சக்திவேல்(வயது 35), விவசாயி. இவரது மனைவி சந்திரலேகா(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரியில் சக்திவேல் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சக்திவேலின் தாய் அலமேலு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சக்திவேலை அவரது மனைவியே, தனது கள்ளக்காதலன் க.மாமாந்தூரை சேர்ந்த மதிவாணனுடன்(32) சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், அதற்கு சக்திவேலின் மாமியார் அஞ்சலை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சந்திரலேகா, அஞ்சலை, கள்ளக்காதலன் மதிவாணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் போலீசாரிடம் சந்திரலேகா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது தாய் அஞ்சலையை பார்ப்பதற்காக, க.மாமாந்தூரை சேர்ந்த மதிவாணன் அடிக்கடி வீட்டுக்கு வந்தார். அப்போது எனக்கும் மதிவாணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

இதையறிந்த சக்திவேல், என்னை கண்டித்தார். இதனால் எனக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், எனது தாய் அஞ்சலை மதிவாணனுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சக்திவேல் தூங்கியதும், மதிவாணனை வீட்டுக்கு வரவழைத்தேன். பின்னர் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேலின் கழுத்தை கயிறு மற்றும் சேலையால் நெரித்தோம். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து சக்திவேலின் உடலை அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டு, தண்ணீரில் மூழ்கி இறந்ததாக நாடகமாடினோம். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயியை, மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story