தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எடப்பாடி பழனிசாமி பேட்டி


தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2018 4:30 AM IST (Updated: 16 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஓமலூர்,

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

பேட்டி

இதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டத்தில் தற்போது மழை பெய்து உள்ளது. கர்நாடகம், தமிழகத்துக்கு 80 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது உள்ளது. இதில் 7 டி.எம்.சி. தண்ணீரை கொடுத்தால்கூட டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு போதுமானதாக இருக்கும். எனவே, 7 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் உடனே வழங்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மரபுகளை கடைபிடித்தனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் அங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் தரப்பில் கர்நாடகத்தில் போட்டியிடப்போவதாக தெரிவித்து உள்ளது குறித்து நான் எதுவும் கூறமுடியாது.

விமான நிலையம்

ஒரு கட்சியின் ஆணிவேர் ஊராட்சி செயலாளர்கள் தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெருந்தலைவர்கள் வகுத்த கொள்கைகளில் இந்த அரசு பயணிக்கிறது. அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி. முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. தான் மத்திய அரசிடம் முதலில் வலியுறுத்தியது. தமிழக மக்கள் சார்ந்த திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. அரசை கவிழ்க்க வேண்டும் என சிலர் செயல்படுகின்றனர். அது கனவிலும் நடக்காது. சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல் கட்சி

இதன்பின்னர் நடிகர் கமல் கட்சி தொடங்க உள்ளதாக கூறி உள்ளாரே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்கியபின்னர் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. அதில் அ.தி.மு.க.வும் ஒன்று, என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் (ஓமலூர்), ராஜா (சங்ககிரி), மனோன்மணி (வீரபாண்டி), சித்ரா (ஏற்காடு), சின்னதம்பி (ஆத்தூர்), மருதமுத்து (கெங்கவல்லி), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஒன்றிய செயலாளர்கள் பச்சியப்பன் (ஓமலூர் தெற்கு), அசோகன் (ஓமலூர் வடக்கு), சித்தேஸ்வரன் (காடையாம்பட்டி) உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story