கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து பானையை தலையில் சுமந்து ஆர்ப்பாட்டம்


கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து பானையை தலையில் சுமந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2018 4:30 AM IST (Updated: 16 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து நாமம் வரைந்து பானையை தலையில் சுமந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட கரும்புக்கு ரூ.28 கோடி வரை நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என கரும்பு விவசாயிகள் அறிவித்தனர். உடனே கரும்பு விவசாயிகளை அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பொங்கல் பண்டிகைக்குள் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த விவாசயிகள், பொங்கல் பண்டிகையை துக்கநாளாக அனுசரிக்கும் விதமாக சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து, மண்பானையில் நாமம் வரைந்து அந்த பானையை தலையில் சுமந்தவாறு குருங்குளம் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருப்பதி, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story