வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா அமைச்சர்-எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்


வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா அமைச்சர்-எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:17 PM GMT)

தஞ்சை அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, போலந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜெண்டினா, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து 50 சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு, பொங்கல் விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளுக்கு சந்தனமாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு தாரை, தப்பட்டை முழங்க நெய்வாசல் கிராமத்தில் வீதி, வீதியாக அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு பொதுமக்கள் ஆராத்தி எடுத்து திலகமிட்டனர்.

இவர்களுடன் அமைச்சர், எம்.பி.க்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். இதையடுத்து நெய்வாசல் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் நடந்த விழாவில் பொங்கல் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

கபடி

பின்னர் பொங்கல் விழாவையொட்டி கபடி, உறியடி நடந்தது. இதில் உறியடியில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு புறம் வெளிநாட்டினரும், மறுபுறம் அமைச்சர், எம்.பி.க்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளும் நின்று கயிற்றை இழுத்தனர். இதில் வெளிநாட்டினர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து தமிழ்நாட்டு கலைஞர்களின் கோலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், மாடுஆட்டம், காளியாட்டம், மேளதாளம், நாதஸ்வரம் மற்றும் வீணை கச்சேரி நடைபெற்றது. மேலும் தஞ்சை ஓவியம், கலைத்தட்டு, தலையாட்டி பொம்மைகள், வீணை, குத்துவிளக்கு ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், ஒருங்கிணைந்த கூட்டுறவு பால்வளத் தலைவர் காந்தி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், தாசில்தார்கள் ஜானகிராமன், தங்கபிரபாகரன், தென்னக பண்பாட்டு நண்பர்கள் குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story