லாரி டிரைவர் வெட்டிக்கொலை பொங்கல் பண்டிகைக்கு மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில் சம்பவம்


லாரி டிரைவர் வெட்டிக்கொலை பொங்கல் பண்டிகைக்கு மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில் சம்பவம்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 9:19 PM GMT)

தா.பேட்டை அருகே பொங்கல் பண்டிகைக்கு மாமனார் வீட்டுக்கு வந்த லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவிற்கு உட்பட்ட அப்பண்ணநல்லூரை அடுத்த மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 35). லாரி டிரைவரான இவர் தனது மனைவி அமுதா (25) மற்றும் 2 மகன்களுடன் திருப்பூர் மாவட்டம் பூனாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக தனது குடும்பத்தினருடன் தா.பேட்டை அடுத்த கண்ணனூர் குரும்பபட்டி கிராமத்தில் உள்ள மாமனார்் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் மாலை குமரவேலுக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் தனது மனைவியிடம் பஸ் நிலையம் வரை சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர், சற்று நேரத்தில் மனைவிக்கு போன் செய்த குமரவேல், அப்பண்ணநல்லூர் கிராமத்தில் உள்ள தனது தந்தையை பார்த்துவிட்டு வருவதாக கூறினார். அதற்கு அமுதா, தானும் கூட வருவதாக கூறியதற்கு வேண்டாம், தான் மட்டும் சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நேற்று காலை வரை குமரவேல் மாமனார் வீட்டிற்கு வரவில்லை.

இந்தநிலையில் கண்ணனூரை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் வீரமச்சான்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடக்கழிவு கொட்டும் குப்பைகிடங்கு அருகே லாரி டிரைவர் குமரவேல் கழுத்து மற்றும் உடம்பில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது செல்போனும் மாயமாகி இருந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குமரவேல் பிணமாக கிடக்கும் தகவலறிந்த அவரது மனைவி அமுதா மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். தா.பேட்டை இன்ஸ்பெக்டர் மனோகரன்(பொறுப்பு), ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கோவிந்தராசு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் குமரவேலை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story