கண்ணகி கோவிலுக்கு பொங்கல் வைக்க சென்ற பெண் சமூக ஆர்வலர் உள்பட 4 பேர் கைது


கண்ணகி கோவிலுக்கு பொங்கல் வைக்க சென்ற பெண் சமூக ஆர்வலர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2018 4:00 AM IST (Updated: 16 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கண்ணகி கோவிலுக்கு பொங்கல் வைக்க சென்ற பெண் சமூக ஆர்வலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

தேனி மாவட்டம் கூடலூர் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்ணகியை வழிபட்டு செல்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து கண்ணகி கோவிலுக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லை. இதனால் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் மலைப்பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வழிபாடு செய்ய அனுமதி தரவேண்டும் என்று தமிழக பக்தர்கள் சார்பில் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்படும். இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த நர்மதா நந்தகுமார் (வயது 39), திருப்பூரை சேர்ந்த பாபு பத்மநாபன் (45), துர்கேஷ்குமார் (40), கார்த்திக் (40) ஆகிய 4 பேர் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடி பகுதிக்கு நேற்று வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கண்ணகி கோவிலுக்கு பொங்கல் வைக்க நடந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் அன்பழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பொங்கல் பானையுடன் செல்ல முயன்ற நர்மதா நந்தகுமாரை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன் வந்தவர்கள் போலீஸ் வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நர்மதா உள்பட நான்கு பேரையும் கைது செய்து லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story