டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று பெருந்துறை வருகை


டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று பெருந்துறை வருகை
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 10:04 PM GMT)

டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று பெருந்துறைக்கு வருகிறார்.

ஈரோடு,

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரன் சமீபத்தில் நடந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் எம்.எல்.ஏ. ஆன பிறகு முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார். முன்னதாக புதுச்சேரியில் இருந்து காரில் புறப்படும் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு பகல் 11 மணிக்கு வருகிறார். அவருக்கு பெருந்துறை பஸ் நிலையம் அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

தினகரன் அணியை சேர்ந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி ஆகியோர் தலைமையில் இந்த வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கள்ளிப்பட்டி காளியண்ணன், பேரவை செயலாளர் கதிர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.சுப்பிரமணியம் (பெருந்துறை), ஏ.பி.ஜெகநாதன் (ஊத்துக்குளி), கார்த்திகேயன் (அந்தியூர்), அமரன் (பவானிசாகர்), பொன்னுசாமி (நம்பியூர்), லூர்துசாமி (டி.என்.பாளையம்) ஆகியோர் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பெருந்துறையில் கூடி உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதுபற்றி வரவேற்பு குழு நிர்வாகிகள் கூறும்போது, ‘டி.டி.வி.தினகரன், எம்.எல்.ஏ. பதவி ஏற்று இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எம்.எல்.ஏ.வாகி முதல் முறையாக ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தொண்டர்களும், ஆதரவு அணியினரும் திரண்டு வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்’ என்றார்கள்.

பெருந்துறையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் கார் மூலம் புறப்பட்டு குன்னூர் செல்கிறார்.

Next Story