பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் இந்து அமைப்பினர் கொலை பற்றி மறுவிசாரணை எடியூரப்பா பேச்சு
கோலார் மாவட்டத்தில் எடியூரப்பா சீனிவாசப்பூர், முல்பாகல், பங்காருபேட்டையில் நடந்த பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.
கோலார் தங்கவயல்,
பங்காருபேட்டை ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
இந்த பரிவர்த்தனா யாத்திரை இன்றுடன் (அதாவது கடந்த 13-ந்தேதியுடன்) 75 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் 1½ கோடி மக்களை சந்தித்து உள்ளேன். மாநிலத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் போலீசார் இந்த கொலை வழக்குகளை திறம்பட விசாரிப்பதில்லை. உண்மை குற்றவாளிகளை பிடிக்க காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் இந்து அமைப்பினர் கொலை சம்பவங்கள் பற்றி மறுவிசாரணை நடத்துவோம்.
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பயங்கரவாதிகள் என சித்தராமையா கூறிவருகிறார். இது கண்டிக்கத்தக்கது. மேலும் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா என்ற பெயரில் சித்தராமையா கட்சி கூட்டம் நடத்தி வருகிறார். இது அவருக்கு தோல்வியில் தான் முடியும். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 18 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி புரிந்தது. அதனை தகர்த்து எறிந்து தற்போது நாட்டில் 19 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அழிவுக்கு சென்றுவிட்டது என்பதற்கு இது ஒன்றே சான்று.
கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 1½ ஆண்டுகளில் கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக், பங்காருபேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமி, பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கட முனி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story