மும்பையில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்


மும்பையில்  பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:27 PM GMT (Updated: 15 Jan 2018 10:27 PM GMT)

மும்பையில் பொங்கல் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மும்பை, 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. மும்பையில் வாழும் தமிழர்களும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். வெளிமாநிலத்தில் இருந்தாலும், தங்களது பாரம்பரியம், கலாசாரத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் பொங்கல் வைத்து அசத்தினர்.

தமிழர்கள் நேற்று அதிகாலை துயில் எழுந்து புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தும், உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கியும் தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சக்தி விநாயகர் அறக்கட்டளை

மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தாராவி சக்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பில் சக்தி விநாயகர் கோவிலில் 13-ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொழில்அதிபர் பாக்கியநாதன் நாடார் தலைமை தாங்கினார். வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். கவுன்சிலர் மாரியம்மாள் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விதார்த் கலந்துகொண்டார். இதில் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், ராஜாஇளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இந்து யுவசேனா

இந்து யுவசேனா அமைப்பின் சார்பாக 13-வது ஆண்டு பொங்கல் விழா தாராவி 90 அடி சாலையில் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் பானைகளில் பொங்கலிட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இல.கணேசன் எம்.பி. கலந்துகொண்டார். மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் 10-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா தாராவி கிராஸ் ரோட்டில் நடந்தது.

தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.

சயான் கோலிவாடா தொகுதி 90 அடி சாலையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர். ஜெரிமெரியில் ஜெரிமெரி தமிழ்ச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். மாலை சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவும் நடந்தது.

இதில் எஸ்.அண்ணாமலை, கே.வி.அசோக்குமார், அலிசேக்மீரான், குமணராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சார்பில் இந்திரா நகரில் பொங்கல் விழா நடந்தது. இதில் சங்க தலைவர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தமிழர் பாசறை

தமிழர் பாசறை செம்பூர் சார்பில் செல்காலனி காமராஜர் மைதானத்தில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் பாசறை தலைவர் ஆ.பி. சுரேஷ், செயலாளர் ம.அந்தோணி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான தமிழர்கள் கலந்துகொண்டனர். செம்பூர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் சிறுவர்கள், பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதேபோல நேற்று இரவு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

மஹராஸ்டிரா சைக்கிள் பேரிவாலா சங்கம், மராட்டிய மாநில தேவேந்திரகுல வேளாளர் சங்கம், மராட்டிய மாநில தமிழர்நல கூட்டமைப்பு, மும்பை அருந்ததியர் சங்கம், பம்பாய் சேனைத்தலைவர் மகாஜன சங்கம், மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை, பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜனசங்கம், சயான் கோலிவாடா நாடார் வியாபாரிகள் நல்வாழ்வு சங்கம், அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றம், அகில பாரத பறையர் சாம்ராஜ்யம், மராட்டிய மாநில தமிழ்ச்சங்கம், உல்வே தமிழ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதுதவிர மும்பை, புனே, தானேயின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை பாரம்பரியம் மாறாமல் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

Next Story