மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை + "||" + Love married் man killed

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்லில், காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஷ் என்ற விக்கி (வயது 21). இவருடைய நண்பர் ஷேக் (22). இவர், திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே தள்ளுவண்டியில் மீன், கோழிக்கறி பொறித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் விக்னேஷ் வேலை பார்த்து வந்தார்.


நேற்று மாலை வழக்கம்போல விக்னேசும், ஷேக்கும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடையின் பின்புறமாக மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். இதனை கவனிக்காமல் விக்னேஷ் அங்கிருந்த சிலிண்டர் மேல் அமர்ந்திருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் விக்னேசை சரமாரியாக வெட்டினர்.

இதைப்பார்த்த ஷேக், அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் விக்னேசின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்தனர். இதில், படுகாயம் அடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். துடி, துடித்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, இன்ஸ்பெக்டர்கள் சபியுல்லா, சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டிக்கொல்லப்பட்ட விக்னேசுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. இவர், காதல் திருமணம் செய்துள்ளார். அவருடைய மனைவி பாண்டீஸ்வரி (18). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இவர், திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்தார். அப்போது அவருக்கும், விக்னேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் விக்னேஷ் காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள நாகல்நகர் பகுதியில் புதுமாப்பிள்ளை கொல்லப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.