புதுச்சாவடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு பரிசு பொருட்களை வீரர்கள் அள்ளி சென்றனர்


புதுச்சாவடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு பரிசு பொருட்களை வீரர்கள் அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை அள்ளி சென்றனர்.

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் நேற்று 166-வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதில் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், திருமானூர், கீழப்பழூர், தா.பழூர், சுத்தமல்லி, கீழமிக்கேல்பட்டி, ஜெயங்கொண்டம், மதாபுரம், பிச்சனூர், பிராஞ்சேரி, மனக்கரை, புள்ளம்பாடி, மீன்சுருட்டி, சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 150-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த புதுச்சாவடி மைதீன் (வயது 34), ஆமணக்கந்தோண்டியை சேர்ந்த மகாராஜன் (58), குமிழங்குழியை சேர்ந்த மைனர் (35) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், கட்டில், பீரோ, நாற்காலிகள், வெள்ளி நாணயம், தாம்பாலம், சால்வை, வேட்டி, துண்டு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சில காளைகளின் கொம்புகளில் வெள்ளி நாணயம் கட்டப்பட்டு இருந்தது. அந்த மாடுகளை பிடிப்பவர்களுக்கு அது சொந்தம் என விழாக்குழு சார்பில் கூறப்பட்டது. இருப்பினும் ஒருவரும் காளையை பிடிக்கவில்லை எனவே அது காளையின் உரிமையாளருக்கே செந்தமாகியது.

கீழப்பழூர், திருமானூர், திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், புள்ளம்பாடி, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் புதுச்சாவடி கிராமமக்கள் செய்திருந்தனர். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story