மத்திய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


மத்திய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

செம்பட்டு,

மத்திய அரசு காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எந்த ஆணையும் பிறப்பிக்க முடியாது. இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா அரசை குறை கூற எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. இருப்பினும் பாரதீய ஜனதா அரசு தனது கடமையில் இருந்து தவறவில்லை.

தமிழகத்தில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பல அணைகளை கட்டினார். அதன்பின்னர் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் என்ன செய்தார்கள்? ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கேயும், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கேயும் அம்மாநில அரசுகள் அணைகளை கட்டி இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு அணைகள் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசு கோதாவரி ஆற்று நீரை கொண்டு வந்து, தமிழக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் மாநில அரசு, மத்திய அரசு கொடுத்த கரும்புக்கான ஆதார விலை தொகையை கூட விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருகிறது. நவீன நகரங்களுக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை கூட தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை. குட்காவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் மதச்சார்பற்று செயல்படுகிறோம் என்று கூறி, தொடர்ந்து இந்து மதத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களை தாஜா செய்வதற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்தை யாரும் தூண்டிவிடவில்லை. அந்தந்த ஊர்களில் கோவில்கள் முன்பாக மக்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகிறார்கள். இதை யாரும் முன்னெடுக்கவில்லை. இனிமேல் இந்து மதத்தை அவமதித்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையே இந்த போராட்டங்கள் காட்டுகின்றன.

ரஜினியும், பாரதீய ஜனதாவும் சேர்ந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என குருமூர்த்தி கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. ரஜினி முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகு, அதுபற்றிய எனது கருத்தை கூறுகிறேன். தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ச்சி பெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபித்து காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை வழியாக நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்குடிக்கு சென்றார். அப்போது புதுக்கோட்டையில், அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஜல்லிக்கட்டை பார்ப்பதில் தவறில்லை. தமிழக அரசு விவசாயிகளையும், பட்டாசு தொழிலாளர்களையும், மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் கருத்து. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசு இருக்க வேண்டுமே தவிர, தங்களது சொந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருக்கக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஊழலை முதல்-அமைச்சர் நாராயணசாமி முதலில் சரி செய்து விட்டு, அதன் பின்னர் பா.ஜ.க. குறித்து பேசட்டும், என்றார். 

Next Story