“தீய செயலின் விளைவுகள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்” மாதா அமிர்தானந்தமயி பேச்சு


“தீய செயலின் விளைவுகள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்” மாதா அமிர்தானந்தமயி பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

“தீய செயல்களினால் ஏற்படும் விளைவுகள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்“ என்று கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி பேசினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரிக்கு மாதா அமிர்தானந்தமயி நேற்று வந்தார். அங்கு அமிர்தபுரத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த சத்சங்க மற்றும் பஜனை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி பேசியதாவது:-

இங்கு கூடியிருக்கும் அனைவரையும் ஒருதாய் மக்களாக பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் அகம், புறம் என்று இரு வகை உண்டு. அந்த இரண்டையும் ஒருங்கிணைத்து சென்றால்தான் வாழ்க்கை முழுமை அடைகிறது.

வாழ்க்கை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடியது. அதில் மரணம் என்பது கூட ஒரு முடிவு கிடையாது.

வாழ்க்கையில் நாம் செய்த தீய செயல்களின் ஏற்படும் விளைவுகள் நம்மை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவற்றை இரண்டு வகையாக பார்க்கலாம்.

அதில் ஒன்று, கண்ணாடியில் தூசி படிந்திருப்பதை போன்றது. கண்ணாடியை துடைத்து சரிசெய்வதை போன்று, இறைவனிடம் தவறுக்காக மன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்து சரிசெய்யலாம்.

மற்றொன்று புற்றுநோய் போன்றது. நாம் என்னதான் அதை சரிசெய்ய முயற்சித்தாலும் அதன் வினை நம்முள் இருந்துகொண்டு உறுத்திக் கொண்டே இருக்கும்.

அதே நேரத்தில் கடந்த கால தவறுகளை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கக் கூடாது. நிகழ்காலத்தில் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவேண்டும். சிரித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது கோபம்.

ஆகவே, வாழ்வில் கோபத்தை குறைத்து அன்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் புதிய புதிய படைப்புகள் உருவாகின்றன. எனவே, ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. எனவே அனைவரும் கோபத்தை விட்டு, பொறாமைகளை தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ பழக வேண்டும்.

இவ்வாறு மாதா அமிர்தானந்தமயி பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story