காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு


காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 4:15 AM IST (Updated: 17 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த அமிர்தியில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மான், முயல், நரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், மயில், புறா, கிளி போன்ற பறவைகளும், முதலை, பாம்புவகைகள் போன்றவை காணப்படுகிறது.

ஜவ்வாது மலைத்தொடரில் இயற்கை எழில்கொஞ்சும் வகையில் அமைந்துள்ள பூங்கா வேலூர் மாவட்டத்தில் ஒரு சுற்றுலா தலமாக காணப்படுகிறது. வேலூர் மட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இயற்கை விரும்பிகள், இங்குள்ள கொட்டாறு நீர்வீழ்ச்சியை காணவும் அதிக அளவில் அமிர்திக்கு வருகை புரிகின்றனர்.

சாதாரண நாட்களில் செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் நேற்று காணும் பொங்கல் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் எனவே வனத்துறையினர் நேற்று பூங்காவிற்கு விடுமுறை அளிக்கவில்லை. நேற்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு படையெடுத்தனர்.

அவர்கள் வன உயிரினங்களை பார்வையிட்டு தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குடும்பமாக வந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவுகளை பூங்காவில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். சறுக்குமரம், ஊஞ்சல் போன்றவற்றில் சிறுவர்கள் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

அருகில் உள்ள கொட்டாறு ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. எனினும் பூங்காவிற்கு வந்தவர்கள் அங்கு சென்று இயற்கை எழிலை ரசித்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள அமிர்தி நீர்வீழ்ச்சிக்கும் சென்று குளித்து மகிழ்ந்தனர். பயணிகளின் வருகை காரணமான அந்த பகுதியில் சிறு, சிறு தற்காலிக உணவு கடைகள் முளைத்தன.

சுமார் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story