பிரபல ரவுடி கொலையில் பரபரப்பு தகவல்கள் கொற கோபி உள்ளிட்ட 6 பேர் சரண் அடைய திட்டம்


பிரபல ரவுடி கொலையில் பரபரப்பு தகவல்கள் கொற கோபி உள்ளிட்ட 6 பேர் சரண் அடைய திட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பிரபல ரவுடி சேட்டு கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக பிரபல ரவுடி கொற கோபி உள்பட 6 பேர் கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஓசூர்,

ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சேட்டு என்கிற பிரேம் நவாஸ் (வயது 36) கடந்த 13-ந் தேதி காலை வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டார். மறுநாள் 14-ந் தேதி காலை ஓசூர் அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கோபி என்கிற கொற கோபி, அவனது கூட்டாளிகள் ராம் நகரைச் சேர்ந்த ராஜேஷ், நரேஷ், பிரவீன், நவாஸ், சுகேல் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ரவுடி சேட்டு கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

அதன் விவரம் வருமாறு:-

கொலையுண்ட ரவுடி சேட்டு ஓசூர் ராம் நகரில் தாஜ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தனை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பும், கடந்த 2014-ம் ஆண்டு ஓசூர் இரும்பு வியாபாரி முஸ்தாக்கை ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகிலும் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த வழக்குகள் சேட்டு மீது உள்ளன.

இதைத் தவிர மேலும் சில வழக்குகள் இருந்ததால் அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு முஸ்தாக் கொலையில் தற்போது கொலையுண்ட சேட்டு மற்றும் தற்போது சேட்டு கொலையில் தலைமறைவாக உள்ள நவாஸ், சுகேல் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்கள் ஆவார்கள். சேட்டுவும், நவாசும் உறவினர்கள் ஆவார்கள். இவர்களுக்குள் சொத்து பிரச்சினை உள்ளது.

மேலும் நவாசும், சேட்டுவும், ஒரு வீட்டில் உள்ள அக்கா - தங்கையை காதலித்து வந்துள்ளனர். இதில் நவாஸ் அக்காவையும், சேட்டு தங்கையையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினைகளின் காரணமாக நவாஸ் சேட்டுவை விட்டு விலகினார்.

இதைத் தொடர்ந்து நவாஸ், ஓசூர் ராம்நகர் பிரபல ரவுடி கொற கோபியிடம் அடைக்கலம் ஆனார். அத்துடன் நவாசுடன் சேர்ந்து சுகேலும் கொற கோபி கூட்டத்தில் சேர்ந்தார். ஏற்கனவே கொற கோபிக்கும், சேட்டுவிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சேட்டுவின் மாமா நூருல்லாவை கடந்த 2007-ம் ஆண்டு கொற கோபி தலைமையிலான ரவுடி கும்பல் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் சேட்டுவிற்கும், கொற கோபிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கொற கோபி, சேட்டுவை தீர்த்து கட்ட திட்டமிட்டார். அதேபோல சேட்டுவும் தனது மாமா நூருல்லாவை கொன்ற கொற கோபியை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

இந்த நேரத்தில்தான் சேட்டுவுடன் இருந்த நவாஸ், சுகேல் ஆகியோர் கொற கோபி வசம் சேர்ந்தனர். இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட கொற கோபி, சேட்டுவை தீர்த்துக்கட்டுவதற்கு இதை பயன்படுத்திக் கொண்டான்.

இதன்படி கடந்த 13-ந் தேதி அதிகாலை கொற கோபி தலைமையிலான கூட்டாளிகள், சேட்டுவை கடத்தி பின்னர் கைகளை கட்டி தலையை தனியாக துண்டித்து கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

ரவுடி கொற கோபி மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேரும், தற்போது தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். அவர்கள் கர்நாடகாவிற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இன்று (புதன்கிழமை) நீதிமன்ற பணிகள் தொடங்க உள்ள நிலையில், கொலையாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் சரண் அடைய திட்டமிட்டு உள்ளதாகவும், அவர்கள் எந்த கோர்ட்டில் சரண் அடைவார்கள் என்று தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story