விருதுநகரில் இலவச வேட்டி- சேலை கேட்டு ரேஷன்கடை முற்றுகை


விருதுநகரில் இலவச வேட்டி- சேலை கேட்டு ரேஷன்கடை முற்றுகை
x
தினத்தந்தி 17 Jan 2018 3:30 AM IST (Updated: 17 Jan 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் இலவச வேட்டி-சேலை வழங்க கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா வேட்டி- சேலை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 5-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் வேட்டி-சேலை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆனாலும் பல ரேஷன் கடைகளுக்கு முழுமையாக வேட்டி-சேலை அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரச்சினை ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

விருதுநகர் தெற்குரதவீதியில் விருதுநகர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை நிர்வாகத்தில் உள்ள ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 435 ரேஷன்கார்டுதாரர்களுக்கு வேட்டி-சேலை வழங்க வேண்டிய நிலையில் 277 பேருக்கு மட்டுமே வேட்டி-சேலை வழங்கக் கூடிய நிலை உள்ளது. இதனால் ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் இலவச வேட்டி- சேலை வழங்க வலியுறுத்தி ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் விடுமுறையில் உள்ளதால் உரிய தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் விருதுநகர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையின் தலைவர் வெங்கடேஷ் சம்பவ இடத்துக்கு வந்தார். தகுதி உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் வேட்டி-சேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்வரை இலவச வேட்டி-சேலை வினியோகத்தை நிறுத்தி வைக்குமாறும் ரேஷன் கடை ஊழியர்களை கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story