ஓரியூர் திட்டையில் அரசு பழத்தோட்டம் செல்லும் வழியை அடைத்து பெண்கள் போராட்டம்


ஓரியூர் திட்டையில் அரசு பழத்தோட்டம் செல்லும் வழியை அடைத்து பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:15 AM IST (Updated: 17 Jan 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்துளை கிணறு அமைத்ததால் நீராதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி ஓரியூர் திட்டையில் உள்ள அரசு பழத்தோட்டத்திற்கு செல்லும் வழியை அடைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா ஓரியூர் திட்டை பகுதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் அரசு பழத்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு தற்போது தரை சமப்படுத்தும் பணிகள், வேலி அமைத்தல், 3 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் பழக்கன்றுகள் நடுவதற்காக பாத்திகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஓரியூர் திட்டை பகுதியில் மகளிர் அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பழத்தோட்டத்திற்கு செல்லும் சாலையில் முட்செடிகளை வைத்து பாதையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஓரியூர் திட்டை கிராம தலைவர் பத்திநாதன் மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:- ஓரியூர் திட்டை பகுதியில் சுமார் 35 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் கிராமத்தின் மேய்ச்சல் நிலம் இருந்தது. இதனை வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு புறம்போக்கு என பதிவேடுகளில் மாற்றம் செய்து அரசு பழத்தோட்டம் அமைத்துள்ளனர். மேலும் அங்கு சுமார் 1,000 அடிக்கு மேல் 3 புதிய ஆழ்துளை அமைத்துள்ளனர். இதனால் ஓரியூர் கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கிணறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாமல் போனதால் கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு பழத்தோட்டத்தில் அமைத்துள்ள புதிய ஆழ்துளை கிணற்றை மூடவும், ஓரியூர் கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story