வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப ‘ஆன்லைன் ரசீது’ முறை அமலுக்கு வந்தது, தொழில்முனைவோர்கள் எதிர்ப்பு


வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப ‘ஆன்லைன் ரசீது’ முறை அமலுக்கு வந்தது, தொழில்முனைவோர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 3:45 AM IST (Updated: 17 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப ‘ஆன்லைன் ரசீது’ (இ-வே) முறை கோவையில் அமலுக்கு வந்தது. இதற்கு தொழில்முனைவோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைப்படி, ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து வினியோகஸ்தர்களுக்கோ, நுகர்வோர்களுக்கோ லாரியில் அனுப்பி வைக்கும்போது, ஆன்லைனில் பதிவு செய் யப்பட்ட இ-வே ரசீது கைவசம் வைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. பறக்கும் படையினர் சரக்கு லாரிகளை தடுத்து நிறுத்தும் போது அந்த ரசீதை காண்பிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்துவதில் உற்பத்தியாளர்களுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. எனவே இ-வே ரசீது வைத்திருக்கும் முறையை அமல்படுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் ஆன்லைன் (இ-வே) ரசீது இல்லாமல் வாகனங்களில் சரக்குகளை கொண்டு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் முன்னோட்டமாக கோவை கோட்டத்தில் இ-வே ரசீது நடைமுறையை கடை பிடிக்கும்படி கோவை கோட்ட ஜி.எஸ்.டி அதிகாரிகள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இ- வே ரசீது முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு கோவை சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குறுந்தொழில் செய்யும் கோவையை சேர்ந்த ராஜவேலு கூறியதாவது:-

50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்குகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வருகிற 1-ந் தேதி முதல் இ-வே ரசீது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொழில்முனைவோரை மிகவும் பாதிக்கும். ஆனாலும் இ-வே ரசீது முறையை சோதனைமுயற்சியாக கோவையில் நேற்று முதல் வணிகவரித் துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி உள்ளனர். 2 மோட்டார் பம்புகளை எடுத்து சென்றாலே 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரும். இப்படிப்பட்ட நிலையில் இ-வே ரசீது கையில் இருக்க வேண்டும் என்பது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும். பிற மாநிலங்களுக்கு அனுப்பும் சரக்குகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் என்பதை ரூ.1 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லா விட்டால் சிறு, குறுந்தொழில்கள் அழிந்து போகும். அந்த தொழிலை நடத்தி வருபவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story