தேதி அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம், கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி


தேதி அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம், கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2018 2:52 AM IST (Updated: 17 Jan 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தால், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள பகுதியில் போட்டியிடுவோம் என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

சின்னாளபட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். அப்போது அவர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும். இந்த கோரிக்கையை யார் ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்துகிறார்களோ அவர்களுக்கு எங்களது ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். எனக்கு ஜெயலலிதா அரசியல் அங்கீகாரம் கொடுத்தார். இருந்தாலும் இந்த அரசியல் அங்கீகாரம் கொடுப்பதற்கு வழிமுறை செய்தது சசிகலா தான். இதனை ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில், சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதுபற்றி அப்போது முடிவு எடுப்பேன்.

கவிஞர் வைரமுத்து பேசிய கருத்து சம்பந்தமாக ஏற்கனவே நானும், நண்பர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் சேர்ந்து எச்.ராஜாவுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். என்னை பொறுத்தவரை மதமோ, இனமோ, மொழியோ, ஒரு கலாசாரமோ எந்த விதமான விஷயமாக இருந்தாலும் அதனை ஆதரித்து பேசுவதற்கு உங்களுக்கு எந்த அளவு அதிகாரம், உரிமை உள்ளதோ, அதே அதிகாரம், உரிமை மாற்றுக் கருத்தை சொல்பவர்களுக்கும் உண்டு.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒரு தரப்பினருக்கு வழங்கி விட்டது. சின்னம் என்பது அந்த கட்சியின் உட்கட்சி பிரச்சினை, அவர்களின் நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய பிரச்சினை. என்னை பொறுத்தவரை ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்ட முக்குலத்தோர் புலிப்படை திருவாடனை சட்டமன்ற உறுப்பினரானேன். அவரது மறைவுக்கு பின் எல்லாவற்றிலும் என்னுடைய பங்களிப்பு உள்ளது. அது எல்லோருக்கும் தெரியும்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் எங்களுடைய சமூக அமைப்பு அதிகம் உள்ள பகுதியில் போட்டியிட திட்டம் உள்ளது. ஆளும் கட்சியுடன் தோழமை உள்ளதால் அதுபற்றி அப்போது அவர்களுடன் நான் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story