கோவை பிரஸ்காலனியில் செயல்பட்டு வந்த மத்திய அரசு அச்சகம் மூடப்பட்டது


கோவை பிரஸ்காலனியில் செயல்பட்டு வந்த மத்திய அரசு அச்சகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 17 Jan 2018 4:00 AM IST (Updated: 17 Jan 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

கோவை பிரஸ்காலனியில் செயல்பட்டு வந்த மத்திய அரசு அச்சகம் மூடப்பட்டது.

இடிகரை,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள பிரஸ்காலனியில் இந்திய அரசு அச்சகம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இங்கு தபால்துறையில் பயன்படுத்தப்படும் கடிதம், கார்டு, கணக்கு புத்தகம், கோவை வேளாண் பல்கலைக்கழக வினாத்தாள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமிற்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் துறை சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் அச்சடிக்கப்பட்டு வந்தன. இங்கு 64 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த அச்சகத்தை மூடிவிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

பின்னர் அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சக தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மத்திய அரசு அச்சகத்தை முடும் முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து இங்கு பணியாற்றிவந்த தொழிலாளர்கள் இந்த மாத இறுதிக்குள் நாசிக் அச்சகத்தில் பணியில் சேரவேண்டும் என்று மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மாலையுடன் இந்த அச்சகத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக 5 தொழிலாளர்கள் நாசிக் அச்சகத்திற்கு சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் விடுப்பு எடுத்து விட்டு இன்னும் செல்லாமல் உள்ளனர். இதுகுறித்து அச்சக தொழிலாளர்கள் கூறும்போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அச்சகத்தை மூடக்கூடாது என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

மேலும் இங்கு பணியாற்றிவரும் தொழிலாளர்களின் பணியிட மாற்ற நியமனத்தை ரத்து செய்யக்கோரி மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. நாசிக் அச்சகத்தில் பணியில் சேர இன்னும் 12 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம் என்று தெரிவித்தனர். 

Next Story