சட்டவிரோதமாக அரசு நிறுவனம் கட்டிடம் கட்டுவதாக வழக்கு


சட்டவிரோதமாக அரசு நிறுவனம் கட்டிடம் கட்டுவதாக வழக்கு
x
தினத்தந்தி 17 Jan 2018 3:36 AM IST (Updated: 17 Jan 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிறுவனம் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஒரு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் அஸ்லம்பாஷா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிண்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான கிங்ஸ் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதுகுறித்து கிண்டி தாசில்தாரிடம் புகார் செய்தேன். அவர் விசாரணை நடத்தி அந்த இடம் அரசு நிறுவனத்துக்கு சொந்தமானது என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் கிங்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டிவருகிறது.

மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போது அங்கு கட்டிடம் கட்டுவது நியாயமற்றது. மேல்முறையீட்டில் அந்த இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தற்போது கட்டப்பட்டுவரும் கட்டிடத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, அந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையாளர், பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர், இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறை செயலாளர், சென்னை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை 18-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.

Next Story