காரிமங்கலம், நூலஅள்ளி பகுதிகளில் எருது விடும் விழா


காரிமங்கலம், நூலஅள்ளி பகுதிகளில் எருது விடும் விழா
x
தினத்தந்தி 18 Jan 2018 4:15 AM IST (Updated: 18 Jan 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம், நூலஅள்ளி பகுதிகளில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கெரகோடஅள்ளி, குட்டூர், வெள்ளையன் கொட்டாவூர், கொள்ளுப்பட்டி, மொட்டலூர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த எருதுகள் பங்கேற்றன. இவை ராமசாமி கோவில் முன்பு ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு அவற்றின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மொரப்பூர் சாலை வழியாக எருதுகள் ஓடவிடப்பட்டன. இதை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையோரங்களில் திரண்டனர். நூற்றுக்கணக்கானோர் குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் நின்று எருதாட்ட திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கண்டு களித்தனர். அங்கும், இங்கும் ஓடிய எருதுகள் முட்டி 5 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் நூலஅள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டுகளித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரியடிக்கும் போட்டி, வழுக்குமரம் ஏறும்போட்டி ஆகியவையும் நடைபெற்றன. இதில் திரளானோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரிமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ராமாபுரம், கெரகோடஅள்ளி, மொட்டலூர், எச்சனம்பட்டி, கொட்டாவூர், எல்லன்கொட்டாய், பையம்பட்டியானூர், கொள்ளுப்பட்டி, குட்டூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த காளைகள் அழைத்து வரப்பட்டன. இதைத் தொடர்ந்து காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. விழாவை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.

விழா நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென காளை ஒன்று சீறிப்பாய்ந்து வந்து பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். காரிமங்கலம் மேல் தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 55), குட்டூரை சேர்ந்த முனியப்பன் (60) ஆகியோர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ½ மணி நேரம் கழித்து மீண்டும் விழா தொடங்கியது. இந்த விழாவையொட்டி காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story