எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி வெட்டிக்கொலை காதல் தகராறு காரணமா? போலீசார் விசாரணை


எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி வெட்டிக்கொலை காதல் தகராறு காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Jan 2018 2:30 AM IST (Updated: 18 Jan 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே மில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமம் உள்ளது. தூத்துக்குடி-மதுரை நாற்கர சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மாசார்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மில் தொழிலாளி

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் மீது ரூ.50 மதிப்பிலான 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. அவரது உடலின் அருகில் கிடந்த பையில் மடிக்கணினி இருந்தது. மேலும் அந்த வாலிபரின் பையில் செல்போன், வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை இருந்தன. அவற்றின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பெரிய கருப்பன் மகன் அருண்பாண்டி (வயது 24) என்பது தெரிய வந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த. இவர், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

காரணம் என்ன?

அருண்பாண்டி பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் காணும் பொங்கலை முன்னிட்டு, நண்பர்களை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். இந்த நிலையில் அருண்பாண்டி வெம்பூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அருண்பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருண்பாண்டியை கொலை செய்தது யார்?. காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?. அவரை வேறு எங்கேனும் கொலை செய்து உடலை இங்கு வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story