ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: வைரமுத்துவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: வைரமுத்துவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:00 PM GMT (Updated: 2018-01-18T00:48:41+05:30)

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வைரமுத்துவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

தமிழை வளர்த்த 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்தும், அவர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடாதிபதி பாபுஜி சுவாமிகள் மற்றும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆண்டாள் சொக்கலிங்கம், ராஷ்டிரிய இந்து பரிஷத் மாநில தலைவர் ராமநாதன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவையில் உள்ள வைணவ அமைப்பை சேர்ந்தவர்கள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வைரமுத்து உடனடியாக ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷம் எழுப்பினார்கள்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு சிறுமி ஆண்டாள் போன்று வேடம் அணிந்து நின்றிருந்தாள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சிறுமியை சுற்றி வந்து கும்மியடித்து பஜனை பாடல்களை பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழை வளர்த்ததில் ஆண்டாளுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. அவற்றை எல்லாம் கவிஞர் வைரமுத்து கூறாமல், ஆண்டாள் குறித்து தவறான கருத்தை கூறியது கண்டிக்கத்தக்கது. தவறு செய்வதில் இருவகை உண்டு. ஒன்று யாராவது தூண்டிவிட்டு செய்வது, மற்றொன்று தெரியாமல் செய்வது. ஆனால் வைரமுத்து இந்த இரண்டு வகையிலும் தவறு செய்து உள்ளார். ஆனால் அவரை கண்டிக்காமல் சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதை ஏற்க முடியாது.

எனவே கவிஞர் வைரமுத்து உடனடியாக ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை தமிழகத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் பெருமாள் கோவில்களில் போராட்டம் நடத்தப்படும். மேலும் இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதை தடுக்க தமிழக முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story