ஜெயலலிதா மரணம் குறித்து தெரிவித்தது என்ன? திவாகரன் விளக்கம்


ஜெயலலிதா மரணம் குறித்து தெரிவித்தது என்ன? திவாகரன் விளக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:26 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து தெரிவித்தது என்ன? என்பது குறித்து திவாகரன் நேற்று இரவு திடீர் விளக்கம் அளித்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனது பண்ணைவீட்டில் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மன்னார்குடியில் எம்.ஜி.ஆரின். 101-வது பிறந்த நாளை முன்னிட்டு எங்களது அணி சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை குறிப்பிட்டேன். அதாவது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தீவிர இருதய செயலிழப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. அவ்வாறு ஏற்படும் போது மருத்துவரீதியாக உயிரிழந்ததாக கருதப்படும். ஆனாலும் மூளை செயல்பாடு இருந்து கொண்டிருக்கும். இதனால் டாக்டர்கள் 24 மணி நேரம் எக்மோ கருவி கொண்டு மீண்டும் இருதயத்தை செயல்படவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று முயற்சிப்பார்கள். அதன்பிறகு தான் உயிரிழப்பு குறித்து அறிவிக்கப்படும்.

தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது

அதை குறிப்பிடும் நோக்கில் தான் நான் இதனை குறிப்பிட்டேன். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எனது விளக்கத்தை அளிப்பதற்காக இதை தெரிவிக்கிறேன். அதே போல அப்போல்லோ ரெட்டி என்று நான் குறிப்பிட்டது, நேரடியாக அவரை குறிப்பிட வில்லை. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒருவர் தெரிவித்ததை வைத்து தான் நான் அப்படி குறிப்பிட்டேன். வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் வகையில் நான் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கழகத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசியது, தேவை இல்லாமல் தவறான அர்த்தத்துடன் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story