சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயார்


சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயார்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-18T00:56:42+05:30)

சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

சேலம்,

சேலம் மாநகரில் உள்ள சுகவனேசுவரர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். சேர மண்டலத்தில் கொங்கு வளநாட்டில் மூர்த்தி-ஸ்தலம்-தீர்த்தம் என பெருமை கொண்டதும், தேவர்களின் பாவங்களை நீக்கியதால் பாபநாசம் எனவும், காமதேனு வழிபட்டதால் பட்டீஸ்வரம் எனவும், ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீஸ்வரம் எனவும், சுகப்பிரம்மரிஷி வழிபட்டதால் சுகவனம் எனவும் பெயர் பெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று மகாரதம் என்னும் திருத்தேர் ரதவீதிகளில் வலம் வரும். கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு தேர் பழுதானதால் கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதிய தேர் உருவாக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தபதி பாலு என்பவரால் புதிய தேர் வடிவமைக்கும் பணி தொடங்கியது.

தற்போது புதிய தேர் வடிவமைக்கப்பட்டு சேலம் சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டு, வார்னிஷ் அடிக்கும் பணி நடந்து வருகிறது. புதிய தேர் வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) வெள்ளோட்டம் நடக்கிறது. அதற்காக நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்குகிறது. 21-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாககால பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாககால பூஜை நடக்கிறது.

22-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் காலயாக பூஜையும், தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. அன்று காலை 5.45 மணிக்கு சேலம் சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் கலசங்கள் புறப்பாடும், புதிய தேருக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

இது தொடர்பாக சேலம் சுகவனேசுவரர் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கோ.தமிழரசு கூறியதாவது:-

22-ந் தேதி காலை 7 மணிக்கு சேலம் சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் இருந்து புதிய தேர் வெள்ளோட்டம், புறப்படுகிறது. திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக முதல் அக்ரஹாரத்தில் உள்ள சேலம் டவுன் ராஜகணபதி கோவில் முன்பு காலை 9 மணிக்கு சென்றடைகிறது. அங்கு சுமார் 30 நிமிடம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன் பின்னர் முதல் அக்ரஹாரத்தில் இருந்து தேர் வெள்ளோட்டம் புறப்பட்டு 2-வது அக்ரஹாரம், பட்டைகோவில், சின்னமாரியம்மன் கோவில், சின்னகடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக வந்து மீண்டும் சேலம் டவுன் ராஜகணபதி கோவில் முன்புள்ள தேர்வீதியை அடைகிறது.

இந்த தேரில் பழைய தேரில் உள்ள சிவன் அம்சங்கள் அத்தனையும் உருவபொம்மைகளாக இடம் பெற்றுள்ளது. புதிதாக கிளி மூக்குடன் சுகவனேசுவரர் உருவபொம்மை இடம் பெறுகிறது. தேர் சக்கரம் 4-ம் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தேர் 22 அடி உயரம் உள்ளதாக இருக்கும். சிம்மாசனம் 19 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கலசம் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தின் போது துணி அலங்காரத்துடன் தேரின் உயரம் 50 அடி கொண்டதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story