புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை - டி.டி.வி.தினகரன் பேச்சு


புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை - டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 2018-01-18T01:00:25+05:30)

புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம் என்றும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், கட்சியை மீட்டெடுக்க அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் 90 சதவீத மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் நாம் பல துரோகிகளால் கட்சி சின்னத்தையும், கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

கடந்த நவம்பர் 23-ந் தேதி இரட்டை இலையும், கட்சியும் அவர்களுக்கு தான் சொந்தம் என தேர்தல் கமிஷனிடம் இருந்து நயவஞ்சகமாக பெற்றுள்ளனர். அடுத்த நாளே தேர்தல் அறிவிப்பு வந்ததாலும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தாலும் உடனடியாக கட்சியின் சின்னத்தை பெற முடியவில்லை.

ஆர்.கே. நகர் மக்கள் இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா கையில் இருந்தால் தான் மதிப்பு. தற்போது எம்.ஜி.ஆர். பட வில்லன் கையில் சின்னம் இருப்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு சரித்திர வெற்றியை நமக்கு தந்துள்ளனர்.

ஜெயலலிதா வழியில் நடக்கும் உண்மையான தொண்டர்கள், அரசியல் வாரிசு யார் என்பதை அடையாளம் காட்டும் விதமாக எனக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

வருகிற உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி குக்கர் சின்னத்தை தமிழகம் முழுவதும் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

சுயேச்சையாக தேர்தலில் வெற்றி பெற்று, 90 சதவீத தொண்டர்கள் ஆதரவு உள்ளதால், அ.தி.மு.க.வையும், சின்னத்தையும் நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றம் மூலமாக கண்டிப்பாக மீட்டெடுப்போம். அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நிர்வாகிகளுடன் ஆலோசித்து மிக விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஊட்டியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தனிக்கட்சி தொடங்கினால், எனக்கு ஆதரவாக உள்ள, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் பதவி இழக்க நேரிடும். எனவே, தான் டெல்லி ஐகோர்ட்டில் அ.தி.மு.க. அம்மா அணி பெயரை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி வழக்கு தொடர உள்ளோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முடிவுக்கு வந்ததும் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம். அப்போது ‘சிலீப்பர் செல்கள்’ ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டு போடுவார்கள்.

அ.தி.மு.க.வில் உள்ள குழப்பத்துக்கு பா.ஜ.க. தான் காரணம். இரட்டை இலை கிடைக்க உதவி செய்தது. ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டு வாங்கி கொடுக்க முடியவில்லை. வருமான வரித்துறை பா.ஜனதாவின் ஒரு அங்கமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story