எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க காலஅவகாசம் தராததால் போலீசாரை கண்டித்து தர்ணா


எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க காலஅவகாசம் தராததால் போலீசாரை கண்டித்து தர்ணா
x
தினத்தந்தி 18 Jan 2018 4:30 AM IST (Updated: 18 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க காலஅவகாசம் தராததால் போலீ சாரை கண்டித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பனார்கோவில்,

செம்பனார்கோவில் அருகே காளகஸ்தினாதபுரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 12 மணி அளவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ஜனார்த்தனம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஞானசேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அரசுநமசு, பொறுப்பாளர்கள் ராமு, ராஜசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், கட்சியினரிடம் உடனே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கலைந்து செல்லும்படி கூறினார். அப்போது கட்சியினர், இந்த நிகழ்ச்சிக்கு மேலும் கட்சி பொறுப்பாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர், அவர்கள் வந்தவுடன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கலைந்து செல்வதாக கூறினர். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ½ மணி நேரத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செல்லும்படி கூறினார். அதன்பேரில் அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story