ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:15 AM IST (Updated: 18 Jan 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (சனிக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழுக்களும், வட்ட அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவிலான குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 பேர் இடம்பெற்று உள்ளனர். வட்ட அளவிலான ஜல்லிக்கட்டு குழுவில் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இடம்பெற்று உள்ளனர்.

தற்போது மாவட்ட அளவிலான குழுவோடு இணைந்து பொட்டிரெட்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தனித்தனி குழுக்கள்

அரசு விதித்துள்ள அடிப்படை விதிகள் மற்றும் சட்டதிட்ட விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

மாடுபிடி வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனி குழுக்கள் குறிப்பிட்ட நேரங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த ஜல்லிக்கட்டு வருகிற 20-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

மருத்துவ குழுக்கள்

கால்நடைகளை ஆய்வு செய்து அனுப்புவதற்கும், கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கும் கால்நடை மருத்துவ குழுக்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்வதற்கும், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கும் பொது சுகாதார துறையின் மூலம் டாக்டர்கள் கொண்ட குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் வைக்கப்படும். பார்வையாளர்கள் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டை கண்டுகளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சீனிவாசன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் அழகப்பன், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், எருமப்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்் பிரபாகர், கமலக்கண்ணன், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story