மனுநீதிநாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மனுநீதிநாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-18T01:50:43+05:30)

மனுநீதிநாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

நாகர்கோவில்,

விளவங்கோடு தாலுகா மெதுகும்மல் ஊராட்சி அதங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்ட மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மனுநீதிநாள் முகாம் ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு அனைத்து துறைகளின் மூலம் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு விவரிக்கப்படும். பொதுமக்கள் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளை தெரிந்து கொண்டு, இந்த நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

122 பயனாளிகள்

கடந்த 14-ந் தேதி நடந்த முதல்கட்ட முகாமில் 40 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 6 தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இதர மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலுரை வாசித்தனர். இன்று (அதாவது நேற்று) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 54 முதியோர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 68 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 122 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு செயல்படுத்தும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை கலெக்டர் முருகேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி சந்திரன், ஆதிதிராவிடர் நல அதிகாரி சிவதாஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி பவானி ஸ்ரீஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீன், வேளாண்மை துணை இயக்குனர் புருஷோத்தமன், விளவங்கோடு தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ஜாய் சரோஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story