பொங்கல் விடுமுறையின் போது அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடிய மர்ம கும்பல்


பொங்கல் விடுமுறையின் போது அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடிய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:00 PM GMT (Updated: 17 Jan 2018 8:20 PM GMT)

பொங்கல் விடுமுறையின் போது நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்திற்குள் மர்ம கும்பல் புகுந்து அலமாரி, பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை உடைத்து சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடலிவிளையில் அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி முதல் 5 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடத்தை திறப்பதற்காக அலுவலக உதவியாளர் கருப்பசாமி நேற்று காலை அங்கு வந்தார். அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான வகுப்பறை கதவுகளில் உள்ள தாழ்ப்பாள் பெயர்த்து எடுக்கப்பட்டு, கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு வகுப்பறையில் இருந்த அலமாரியும் உடைக்கப்பட்டு, அதில் மாணவ-மாணவிகள் வைத்திருந்த நோட்டுகள் கிழித்து எறியப்பட்டிருந்தன. இரும்பிலான பெஞ்சுகள், மேஜைகளும் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன.

பள்ளி வளாகத்தில் வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளை வகுப்பறை கதவுகளில் எரிந்து உடைத்து மர்ம கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இதுதவிர ஆசிரியருக்கான அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த அலமாரியில் வைத்திருந்த பாட புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் நாசமாக்கி உள்ளனர்.

பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டதால், பள்ளிக்கூட வளாகம் அலங்கோலமாக மாறிவிட்டது. இதுகுறித்து அலுவலக உதவியாளர் கருப்பசாமி உடனடியாக தலைமை ஆசிரியை பேன்சி, உதவி தலைமை ஆசிரியர் நாகப்பன் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

இதற்கிடையே விடுமுறை முடிந்து பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள் பள்ளியின் நிலையை கண்டு ஆத்திரம் அடைந்தனர். சற்று நேரத்தில் மாணவ-மாணவிகள் திரளாக சென்று பள்ளியின் முன்பாக மெயின்ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், பள்ளிக்கூடம் சூறையாடப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் புகுந்து மர்மநபர்கள் குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அந்த பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுமுறை நாட்களில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சில பள்ளிகளிலேயே இரவுநேர காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தகுந்த ஆட்களை நியமித்து இதுபோன்ற செயல்கள் இனி நடக்காதவாறு தடுக்கவேண்டும். பள்ளியில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டுபிடித்து அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story