காட்பாடி அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது


காட்பாடி அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்பாடி,

காட்பாடியை அடுத்த பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் உமாசங்கர் (வயது 20). சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் நடந்த கிராம உதவியாளர் தேர்வில் பங்கேற்க உமாசங்கர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு நண்பர் தினேஷ்குமாருடன் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த 5 பேர் கொண்ட கும்பல் சங்கரை மிரட்டி அருகில் உள்ள ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று கொலை செய்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

அரக்கோணத்தை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் அய்யர் என்கிற மணிகண்டன் என்பவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. இதில் மணிகண்டனுக்கு ஆதரவாக உமாசங்கர் இருந்துள்ளார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அலெக்ஸ் மற்றும் அவரது தரப்பினர், உமாசங்கரை அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பள்ளிக்குப்பத்தில் பதுங்கி இருந்த அலெக்ஸ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், அன்பு ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.

மேலும் தலைமறைவாக இருக்கும் அலெக்ஸ், ஜெய், ஆறுமுகம் ஆகியோரை தேடி வருகிறோம். அவர்களை கைது செய்த பின்னர் விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story