ஜெயலலிதா மரணத்தில் புதிய சர்ச்சை டிசம்பர் 4-ந் தேதியே இறந்து விட்டதாக சசிகலா சகோதரர் பரபரப்பு தகவல்


ஜெயலலிதா மரணத்தில் புதிய சர்ச்சை டிசம்பர் 4-ந் தேதியே இறந்து விட்டதாக சசிகலா சகோதரர் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:15 PM GMT (Updated: 17 Jan 2018 8:50 PM GMT)

தமிழக முதல்- அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

தஞ்சாவூர்,

அவரது மரணம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணம் குறித்து சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக, அவரது தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் திவாகரன் கலந்து கொண்டு நிதியுதவி மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கு இறந்தார். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அவருடைய மரணத்தை உடனடியாக அறிவிக்கவில்லை. உயிர் பிரிந்த பின்னரும் அவருடைய உடல் வெண்டிலேட்டரில் இருந்தது.

இதுதொடர்பாக மருத்துவமனை குழும தலைவரிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் எங்களுடைய மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள். அதன் பின்னர் மரணத்தை அறிவிக்கிறோம் என கூறினார்.

அப்போது மத்திய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். அவர் தனக்கு வேண்டிய ஒருவருக்கு முதல்-அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பதற்காக இருந்திருக்கிறார். முதல்-அமைச்சர் பதவி என்பது கோழி முட்டையா தூக்கி கொடுப்பதற்கு? அவர் இப்போது உயர் பதவிக்கு சென்று விட்டார். அதனால் அவரது பெயரை நான் சொல்லக்கூடாது.

இவ்வாறு திவாகரன் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் இதுவரை தன்னை அழைக்கவில்லை என்றும், அழைப்பு விடுத்தால் விசாரணைக்கு ஆஜராவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

திவாகரன் வெளியிட்டுள்ள இந்த தகவலால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.

தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், விளக்கம் அளிக்கும் வகையில், மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் திவாகரன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை குறிப்பிட்டேன். அதாவது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கு தீவிர இருதய செயலிழப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. அவ்வாறு ஏற்படும் போது மருத்துவ ரீதியாக உயிரிழந்ததாக கருதப்படும்.

ஆனாலும் மூளை செயல்பாடு இருந்து கொண்டிருக்கும். இதனால் டாக்டர்கள் 24 மணி நேரம் ‘எக்மோ’ கருவி கொண்டு மீண்டும் இருதயத்தை செயல்படவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று முயற்சிப்பார்கள். அதன்பிறகு தான் உயிரிழப்பு குறித்து அறிவிக்கப்படும்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

அதை குறிப்பிடும் நோக்கில் தான் நான் இதனை குறிப்பிட்டேன். ஆனால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. எனவே எனது விளக்கத்தை அளிப்பதற்காக இதை தெரிவிக்கிறேன். வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டும் வகையில் நான் எதையும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் நேற்று பேட்டி அளித்த டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.விடம் திவாகரன் கூறி இருப்பது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலையில் மாரடைப்பு வந்தது. மாரடைப்பு வந்ததும் அவர் இறந்து விட்டார் என்று நானோ, நீங்களோ சொல்ல முடியாது. டாக்டர்கள் தான் சொல்ல வேண்டும். மாரடைப்பு வந்ததும் டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு ‘எக்மோ‘ கருவி பொருத்தப்பட்டது. அதன் பின்னர் டாக்டர்கள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்தது என்று தகவல் கிடைத்ததும் நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போகும் போது மாலை 6.30 மணி அல்லது 7 மணி இருக்கும். அதுதான் எனக்கு தெரியும்.


திவாகரன் சொல்வது பற்றி எனக்கு தெரியாது. அவர் எப்போது அங்கு வந்தார் என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு தெரியாத விஷயத்தை பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்? அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். திவாகரன் சொல்வது உண்மையா, இல்லையா என்று நான் சொல்ல முடியாது. அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா இறந்த பின்னர் மத்திய அரசு தனக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்-அமைச்சர் பதவி கொடுக்க விரும்பியதாக அவர் கூறியது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. இதுபோன்ற தகவல்களால் ஆணையத்தின் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது. உண்மைகள் நிச்சயம் வெளியே வரும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார். 

Next Story