கர்நாடகஅரசிடம் இருந்து தண்ணீரை பெற்று தராவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகும்


கர்நாடகஅரசிடம் இருந்து தண்ணீரை பெற்று தராவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகும்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:45 AM IST (Updated: 18 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகஅரசிடம் இருந்து தண்ணீரை பெற்று தராவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகும் என தஞ்சையில் அய்யாக்கண்ணு கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க(இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பு) மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகஅரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை 111 டி.எம்.சி. தண்ணீர் தான் நமக்கு கிடைத்துள்ளது. மீதுமுள்ள தண்ணீரை தர கர்நாடகஅரசு தயாராக இல்லை. 192 டி.எம்.சி. தண்ணீர் போதாது. கூடுதலாக வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளோம். கர்நாடகஅணைகளில் அதிகஅளவில் தண்ணீர் இருக்கிறது.

தமிழகஅரசு வலியுறுத்திய 15 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகஅரசு தர வேண்டும். மத்தியஅரசு பாராமுகமாய் இருக்காமல் தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்தியஅரசு செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுத்து கர்நாடகஅரசிடம் இருந்து தண்ணீரை பெற்று தரவில்லை என்றால் அடுத்தடுத்து போராட்டம் தீவிரமாகும். வருகிற 27-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யாக்கண்ணு

தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் முழு அளவில் சம்பா சாகுபடி நடைபெறவில்லை. உதாரணத்திற்கு 10 ஏக்கர் இருக்கிறது என்றால் 5 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. அந்த பயிரும் தற்போது தண்ணீர் இன்றி கருகி வருகிறது. எங்களை வாழ வைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பரிதாபமாக பார்க்கிறது. பதவியை தக்க வைப்பதற்காக பல முறை டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பிரச்சினைக்காக கடிதம் எழுதுகிறார். முதல்-அமைச்சர் உடனே டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து பேசி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகஅரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி மத்திய, மாநில அரசுகள் தண்ணீரை பெற்று தராவிட்டால் கடந்த ஆண்டை போல் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த சூழலை பிரதமரும், முதல்-அமைச்சரும் ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story