தூத்துக்குடி மாவட்டத்தில் 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2018 9:30 PM GMT (Updated: 18 Jan 2018 6:54 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கூறினார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 11-ந்தேதி ஆகிய தேதிகளில் 2 சுற்றுகளாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 796 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,194 மையங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி அதன்மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

5,068 பணியாளர்கள்

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களை சேர்ந்தவர்கள் என 5 ஆயிரத்து 68 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 118 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

எனவே அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நாட்களில் தவறாமல் சொட்டு மருந்து போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி, போஸ்கோராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story