வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ.91 ஆயிரம் சிக்கியது


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ.91 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 18 Jan 2018 11:00 PM GMT (Updated: 2018-01-19T00:35:27+05:30)

தோவாளையில் உள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் சிக்கியது. 5 புரோக்கர்களும் பிடிப்பட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தோவாளை பண்டாரபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், அவர்கள் 5 பேரும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 5 புரோக்கர்களிடமும் கத்தை, கத்தையாக இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர். அப்போது அலுவலகத்தில் இருந்த மேஜை மற்றும் பீரோவுக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் கிடந்தது. அந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த பணம் தொடர்பாக அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கு முறையான கணக்கு காட்டப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு இரவு 9.30 மணி வரை நீடித்தது. அதுவரை அலுவலக பணியாளர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வட்டார போக்குவரத்து அதிகாரியும் அவரது அறையிலேயே இருந்தார்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? அது லஞ்சமாக பெற்ற பணமா? என்பது பற்றி புரோக்கர்களிடமும், அலுவலக ஊழியர்களிடம் துருவித்துருவி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, ‘நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் நாங்கள் நடத்திய சோதனையில் புரோக்கர்களிடமும் மற்றும் அலுவலகத்தில் இருந்தும் மொத்தம் 91 ஆயிரத்து 125 ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம். இந்த பணத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையான கணக்கு காட்டப்படவில்லை. எனவே இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story