வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது நெல்லையில், வீரமணி பேட்டி


வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது நெல்லையில், வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2018 2:30 AM IST (Updated: 19 Jan 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கவிஞர் வைரமுத்து, தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

நெல்லை,

கவிஞர் வைரமுத்து, தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து சாதியினரையும்...

தந்தை பெரியாரின் கொள்கையான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி திராவிடர் கழகம் சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து 206 பேர் அர்ச்சகராக பயிற்சி பெற்றனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சேர்ந்த சில அர்ச்சகர்கள், சில அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுவதற்கு தடையில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்பிறகும் கூட தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். கேரள மாநில அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் கொண்டு வந்துள்ளது. திருப்பதியில் கூட இந்த சட்டத்தை அமல்படுத்த ஒத்துக்கொண்டு உள்ளது. தமிழக அரசு இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

கண்டனத்துக்குரியது

வருகிற 30-ந் தேதி காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைத்துள்ளோம்.

கவிஞர் வைரமுத்து, தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது, வேதனைக்குரியது. சிலர் மூடநம்பிக்கையில் நம்பிக்கை கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆன்மிகம் என்று கூறிக்கொண்டு பெண்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பதவி வேண்டும் என்ற நோக்கத்தோடு, கவிஞர் வைரமுத்து பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார்கள்.

காட்டுமிராண்டித்தனமான இந்த செயலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. வட இந்திய கலாசாரத்தை தமிழகத்தில் பரப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும். இந்த நிலை நீடிக்காமல் தமிழக அரசு பார்த்து கொள்ள வேண்டும்.

சமூக நல்லிணக்கம்

திராவிடர் கழகம் ஒரு அமைப்பு. அரசியல் கட்சி அல்ல. எங்கள் அமைப்பு சார்பில் சமூகநல்லிணக்கத்துக்கு பாடுபட்டு வருகிறோம். மத்திய அரசு சிறுபான்மையினரின் சலுகைகளை பறித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கொள்கைகளை அமல்படுத்த முயற்சி செய்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதசார்பின்மையை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story