லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jan 2018 10:30 PM GMT (Updated: 18 Jan 2018 7:37 PM GMT)

லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் இல்லங்களிலும், மரக்கன்றுகளை நடுவதற்காக வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை ஊராட்சியில் ரூ.16 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் பசுமைவலை குடில் அமைத்து அதில் நொச்சி செடிகள் வளர்க்கப்பட்டு வரும் பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த மாவட்ட கலெக்டர், மருத்துவமனையின் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த புற நோயாளிகளிடம் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா என்றும், அனைவருக்கும் போதிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார். பிரசவ வார்டிற்கு சென்ற கலெக்டர், ஒரு நாளைக்கு எத்தனை பிரசவங்கள் நடை பெறுகின்றன, மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அளிக்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளின் வசதிக்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புறநோயாளிகளுக்கான பிரிவின் கட்டுமான பணிகளை விரைந்து ஆரம்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், மோகன், குன்னம் வட்டாட்சியர் தமிழரசன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சேசு, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் செயல் அலுவலர் சின்னசாமி உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story