ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி பரிசுகளை தட்டி சென்ற வீரர்கள்


ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி பரிசுகளை தட்டி சென்ற வீரர்கள்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:30 PM GMT (Updated: 18 Jan 2018 7:38 PM GMT)

கீழமிக்கேல்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை தட்டி சென்றனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த கீழமிக்கேல்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த இக்கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் களும், ஜல்லிக்கட்டு குழுவினரும் கடந்த ஒரு மாத காலமாக வாடிவாசல் மற்றும் அனைத்து முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு பணிகளையும் உறுதி செய்த மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

இதையடுத்து நேற்று கீழமிக்கேல்பட்டி மாதா கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து காளைகளை அடக்கும் வீரர்களையும் டாக்டர்கள் உடல் பரிசோதனை செய்த பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஜெயங்கொண்டம் தாசில்தார் (பொறுப்பு) தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக விழாக்குழுவினர் அவிழ்த்து விட்டனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், சேலம், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 223-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

9 பேர் காயம்

காளைகளை அடக்கிய மாதாபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ்சகாயராஜ் மகன் ஆல்வின் (வயது 23), வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் (37), கார்குடியை சேர்ந்த அருள்செல்வன் (17), மேல சிந்தாமணியை சேர்ந்த பால கிருஷ்ணன் (39), காசங்கோட்டையை சேர்ந்த சின்ராசு (22), செல்லக்கண்ணு (65), கீழமிக்கேல்பட்டியை சேர்ந்த சின்னப்பன் (37) உள்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த அருள் செல்வன், சின்னப்பன் இருவரும் மேல்சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், நாற்காலி, தங்க மோதிரம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், சேலம், கரூர், புதுக்கோட்டை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். 

Next Story