அம்பை அருகே கூட்டுறவு வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


அம்பை அருகே கூட்டுறவு வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2018 9:00 PM GMT (Updated: 18 Jan 2018 7:43 PM GMT)

அம்பை அருகே கூட்டுறவு வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அம்பை,

அம்பை அருகே கூட்டுறவு வேளாண்மை வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகள் போராட்டம்


நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலடியூர், ஏர்மாள்புரம், மேல ஏர்மாள்புரம், செட்டிமேடு உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கான கூட்டுறவு வேளாண்மை வங்கி அம்பை அருகே உள்ள ஆலடியூரில் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வங்கி மூலம் விவசாயம் செய்வதற்கு நில அடமானக்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முறையாக கடன்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளை முறையான அறிவிப்பின்றி ஏலம் விட்டதாகவும், வங்கியை முறையாக திறப்பது இல்லை என்றும் தெரிகிறது. இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிமுத்தாறு வட்டார விவசாயிகள் மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு தலைமையில், ஆலடியூர் கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிமுதல் விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனர். ஆனால் வங்கி மதியம் 12 மணி வரையிலும் திறக்கப்படவில்லை. அப்போது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கடன் உள்ளிட்ட வசதிகளை செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

பல்வேறு கட்சியினர்


போராட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மாரியப்பன், காங்கிரஸ் கட்சி சிவகுமார், த.மா.கா. வள்ளிகண்ணு, ஆறுமுகம், விவசாயிகள் கமிட்டி சங்கரபெருமாள், கோமுராஜன், ம.தி.மு.க. வடிவேல், சப்பாணிமுத்து, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் வேலாண்டி, பூதப்பாண்டி, பெரியசாமி மற்றும் கிருஷ்ணன், இசக்கிமுத்து உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story