பிளஸ்-2 மாணவி மர்மச்சாவு போலீசாரை கண்டித்து பொதுமக்கள் மறியல்


பிளஸ்-2 மாணவி மர்மச்சாவு போலீசாரை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:15 AM IST (Updated: 19 Jan 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி ரெயில் நிலையம் அருகே பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சென்னை, 

திருத்தணியை அடுத்த காசிநாதபுரம் காலனியை சேர்ந்தவர் வரதன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் தமிழரசி (வயது 17). திருத்தணியில் உள்ள அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி பள்ளிக்கு சென்ற தமிழரசி திருத்தணி ரெயில் நிலையத்தை அடுத்த பழைய தர்மராஜா கோவில் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே உடல் சிதைந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்டு ஆடைகள் கிழிந்த நிலையில் இறந்து கிடந்தார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று தெரிகிறது. இது குறித்து மாணவியின் தந்தை, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரனிடம் புகார் தெரிவித்து இருந்தார்.

திடீர் மறியல்

இந்த நிலையில் மாணவியின் மர்மச்சாவில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் திருத்தணி - திருப்பதி சாலை காசிநாதபுரம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவி ஏற்கனவே பள்ளியில் பெற்று இருந்த பரிசுகள் மற்றும் அவரது விடைத்தாள்களை சாலையில் வைத்து அவரது பெற்றோர் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் நரசிம்மன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story